பினாங்கில் மேம்பட்ட வெள்ள நிலைமை; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை -பினாங்கு முதல்வர்

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள நிலைமை தற்போது மேம்பட்டு வருவதால், அவசரகால நிலையை அறிவிக்கும் திட்டம் எதுவும் மாநில அரசிடம் இல்லை என்று பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

செபெராங் பிறை மற்றும் தீவின் சில பகுதிகளில் இதற்கு முன்பு புயல் தாக்கியிருந்தாலும் இதுபோன்ற அவசரகால நிலையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, நேற்றிரவு நடந்த சுக்மா XXI சரவாக் 2024 வெற்றி ஊக்குவிப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், மாநில அரசின் பேரிடர் நிவாரணத் திட்டத்தின் கீழ் உதவி வழங்குவதற்கான பிரிவில் திடீர் வெள்ளம் சேர்க்கப்படவில்லை என்றும், ஆனால் தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நேற்றிரவு 7.30 நிலவரப்படி, பினாங்கில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக மாநிலம் முழுவதும் மொத்தம் 590 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அங்குள்ள எட்டு தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here