கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்களை சோதனை இன்றி நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு தனிப் பாதை அமைத்து செயல்பட்ட ஒரு கும்பலின் தலைவனை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவை எம்ஏஏசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றது.
சிலாங்கூர் மாநில எம்ஏஏசி கைது செய்த அந்த நபரை செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முகமட் சப்ரி இஸ்மாயில் அனுமதி வழங்கினார்.
கேஎல்ஐஏ 1, கேஎல்ஐஏ 2 ஆகிய முனையங்களில் இக்கும்பலின் ஏஜண்டுகளுடன் சேர்ந்து இந்த 40 வயதிற்குட்பட் இந்நபர் செயல்பட்டார் என்று நம்பப்படுகிறது.
இந்நபரை ஏற்கெனவே கடந்த புதன்கிழமை நெகிரி செம்பிலான் மாநில எம்ஏஏசி கைது செய்து மறுநாள் வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 23 ஆம் தேதி வரை தடுத்து வைக்கும் உத்தரவை பெற்றது.
இதனிடையே இந்நபர் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய சிலாங்கூர் எம்ஏஏசி இயக்குனர் டத்தோ அலியாஸ் சலிம், 2009 எஸ் பி ஆர் எம் சட்டம் பிரிவு 17 (a) கீழ் விசாரிக்கப்படுவதாக கூறினார்.