கோலா டுங்குனில் இருந்து 13ஆவது கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள தெங்கோல் தீவு அருகே 33 வயது பெண் ஒருவர் டைவிங் (உள்நீச்சல்) செய்யும் போது உயிரிழந்தார். இந்த சம்பவம் திமூர் டெம்பிள் பகுதியில் நடந்ததாக ஹரியன் மெட்ரோ தெரிவித்துள்ளது.
நூர் அதிகா எமிலியா ஷுப்லி, பத்து 9, செராஸ் வட்டாரத்தில் வசிக்கும் அவர் ஒரு வீட்டு வசதி நிறுவனத்தில் செயலாளராக பணியாற்றி வந்திருக்கிறார். டைவிங் சென்ற 28 பேரில் ஒருவராக இருந்தார். டைவிங் குழுவில் 17 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் இருந்தனர்.
குழு மீண்டும் வெளியே வந்தபோது, ஒரு பயிற்றுவிப்பாளர் ஒரு பெண் இல்லாததைக் கவனித்து மற்றொரு மூழ்காளருடன் தேடலைத் தொடங்கினார். நூர் அதிகா கடலின் அடிப்பகுதியில் ஒரு பாறையில் சிக்கி மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு படகில் உடனடி சுவாச உதவி வழங்கப்பட்டது.
அவர் படகு மூலம் கோலா டுங்குன் ஜெட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் டுங்குன் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்சுக்கு மாற்றப்பட்டார். டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் மைசுரா அப்துல் காதிர், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்றும், டுங்குன் மருத்துவமனைக்கு வந்தவுடன் அது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் கூறினார். மரணத்திற்கான காரணத்தை அறிய அவரது உடல் இன்று காலை பிரேத பரிசோதனைக்காக தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.