கிள்ளான், தெலோக் பங்லிமா கராங் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் திருடியதாக சந்தேகிக்கப்படும் மூன்று உள்ளூர் ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அஹ்மட் ரித்வான் முகமட் நோர் கூறுகையில், அவர்களைத் தடுக்கும் முயற்சியின் போது, சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த அதிகாரி மீது மோதிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனால் அதிகாரிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
மதியம் 2.40 மணியளவில் தனது அண்டை வீட்டினுள் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைவதைப் பற்றி உள்ளூர் நபரிடமிருந்து போலீசாருக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர் விளக்கினார். அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, சிறிய எஸ்யூவியில் வந்த சந்தேக நபர்கள், அதிகாரி ஒருவரின் மோட்டார் சைக்கிள் மீது வேண்டுமென்றே மோதினர்.
அதிகாரி வாகனத்தின் டயரில் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் சந்தேக நபர்கள் வாகனத்தில் தப்பியோடிவிட்டனர் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அஹ்மட் ரித்வான் மேலும் கூறுகையில், தவறான பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த சந்தேக நபர்கள் அப்பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.