உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், கடந்த பிப்ரவரியில், சிறை சென்ற வாலிபர் ரிங்கு இந்த மாத தொடக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
சம்பல்,உத்தர பிரதேசத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே சிறுமியை தீர்த்து கட்டியுள்ள கொடூரம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று, சிறுமியை பைக்கில் ஏற்றிக்கொண்டு அவருடைய சகோதரர் நீரஜ் மற்றும் தாயார் பிரிஜ்வதி சென்றுள்ளனர். மற்றொரு பைக்கில் மற்றொரு சகோதரரான வினீத் மற்றும் தாய்வழி மாமாவான மகாவீர் சென்றுள்ளனர்.
திட்டமிட்டபடி சிறுமியை சகோதரர் வினீத் கைத்துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இந்த சம்பவம் பற்றி போலீஸார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கு முன் ரிங்கு (வயது 20) என்ற வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுபற்றி கடந்த பிப்ரவரியில் காசியாபாத் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது. கைது செய்யப்பட்ட ரிங்கு, இந்த மாத தொடக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சிறுமி சுட்டு கொல்லப்பட்ட பின், ரிங்கு அவருடைய கூட்டாளியுடன் சேர்ந்து பழிவாங்குவதற்காக சிறுமியை கொன்று விட்டனர் என சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ரிங்கு மற்றும் அவருடைய கூட்டாளியை பிடித்து விசாரித்தனர். எனினும், குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதற்காக சிறுமியின் குடும்பத்தினரே அவரை கொலை செய்ய முடிவு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீஸ் சூப்பிரெண்டு கிருஷ்ண குமார் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில், நீரஜ், வினீத் மற்றும் பிரிஜ்வதியை போலீஸார் கைது செய்தனர். மகாவீர் போலீசில் சிக்கவில்லை. கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.