பாட்னா: பீகாரின் பாங்கா மாவட்டத்தில் வாகனம் மோதியதில் கன்வர் யாத்திரை மேற்கொண்ட நான்கு பக்தர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.
அனைத்து பக்தர்களும் வெள்ளிக்கிழமை இரவு சுல்தாங்கஞ்சிலிருந்து ஜஸ்ட் கவுர் நாத் மகாதேவ் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்தில் சிக்கினர்.
காவல் அதிகாரி பிபின் பிஹாரி கூறுகையில், “வாகனம் மோதியதில் கன்வர் யாத்திரை பக்தர்கள் நால்வர் உயிரிழந்தனர். ஆரம்பத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த போதிலும் நிலைமை இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது,” என்றார்.
சம்பவ இடத்துக்கு வந்த சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்டிஎம்) அவினாஷ் குமார் கூறுகையில், “எதிர்பாராத விபத்தில் 10-11 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நால்வர் உயிரிழந்துள்ளனர். நிலைமை அமைதியாக உள்ளது, நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்துவோம்,” என்றார்.
தென்னிந்தியாவில் முருகப்பெருமானுக்கு காவடி சுமந்து, பாத யாத்திரையாக பல கி.மீ. தூரம் நடந்தே வருவதுபோல், வட மாநிலங்களில் ஆண்டுதோறும் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் பாத யாத்திரைக்கு கன்வர் யாத்திரை என்று பெயர். இதை இந்துக்களின் தவக்காலம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள் பாத யாத்திரையாகச் சென்று பல்வேறு புனிதத் தலங்களில் இருந்தும் கங்கையில் இருந்தும் நீரை எடுத்துக்கொண்டு இந்தியாவின் பல்வேறு சிவாலயங்களுக்கும் செல்வார்கள்.








