கோலாலம்பூர் :
பல கார்களின் வைப்பர்களை உடைத்து, நாசம் செய்தது போன்ற செயலைக்காட்டும் ஒரு காணொளி நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் வைரலானது, அதனைத் தொடர்ந்து அச்செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் கைது செய்ததாக பத்து பகாட் மாவட்ட காவல்துறைத் தலைவர்,துணை ஆணையர் ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி கூறினார்.
25 வயதான அந்த வெளிநாட்டு சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவைச் சேர்ந்தவர்களால் கைது செய்யப்பட்டதாகக் கூறிய அவர், குறித்த வைரல் வீடியோ, ஞாயிற்றுக்கிழமை (அக் 20) மதியம் 3:30 மணியளவில் பத்து பகாட் பேருந்து முனையத்திற்கு அருகில் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்.
சந்தேக நபரை கைது செய்த பின்னர் போலீசார் நடத்திய சோதனையில், அவரது பையில் ஒரு மடிப்பு கத்தி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்,” என்று அவர் இன்று திங்கள்கிழமை (அக் 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு பொது இடத்தில் ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் சென்றதற்காக 1958 ஆம் ஆண்டு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் சட்டம் 1958 இன் பிரிவு 6(1) மற்றும் நாசவேலை செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
“மேலும், சந்தேகத்திற்குரிய நபர் சரியான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் தங்கி இருந்ததற்காக குடிநுழைவுச் சட்டம் 1959/1963 பிரிவு 6(1)(c) இன் கீழும் விசாரிக்கப்படுகிறார்,” என்று அவர் சொன்னார்.









