பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயும் மகளும் கைது

கோலாலம்பூர்:

வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் தாய் மற்றும் மகள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 25 வயதான இந்தோனேசியப் பெண், பொதுமக்களின் உதவியுடன், தன்னை கொடுமைப்படுத்திய முதலாளிகளிடமிருந்து தப்பித்துவிட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் முகமட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி சுத்தியல் மற்றும் சூடான இரும்பால் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் அவருக்கு இரு கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டதாக அவர் காவல்துறையில் புகாரளித்தார் என்று, ACP முகமட் ஆசாம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

புகாரினடிப்படையில் 40 மற்றும் 61 வயதுடைய இரண்டு பெண்கள், அம்பாங்கில் உள்ள தாமான் புத்ரா சுலைமானில் வைத்து, அக்டோபர் 14 அன்று கைது செய்யப்பட்டனர்.

“இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் விசாரணை முடியும் வரை அவர்கள் போலீஸ் ஜாமீனில் உள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here