கேளிக்கை மையத்தில் சோதனை; ஐந்து பெண்கள் உட்பட 11 தென் கொரியர்கள் கைது

கோலாலம்பூர்:

இன்று அதிகாலை தலைநகரிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையின் போது ஐந்து பெண்கள் உட்பட 11 தென் கொரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

‘‘Op Gegar’’என்ற குறியீட்டுப் பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் என்றும், பெண்களில் ஒருவர் வளாகத்தின் மேலாளராக இருப்பதாக நம்பப்படுகிறது என்றும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் வான் முகமட் சௌபீ வான் யூசோஃப் கூறினார்.

“இந்த பொழுதுபோக்கு மையம் தென் கொரியர்களுக்கு பிரத்தியேகமாக வழங்குவதாக நம்பப்படுகிறது மற்றும் உணவக வணிகம் என்ற போர்வையில் செயல்படுகிறது. மேலும் இந்த வளாகம் கொரிய மொழியில் கரோக்கி சேவைகளை வழங்குகிறது, மேலும் வாடிக்கையாளர்கள் தொலைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

“முறையான உரிமம் இன்றி செயற்பட்டுவந்த இந்த மையம், மூன்று மணிநேரங்களுக்கு RM300 முதல் RM500 வரையிலான விலையில் விபச்சார சேவைகளை வழங்குவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது,” என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

குடிநுழைவுச் சட்டம் 1959/63 பிரிவு 39(b), பிரிவு 6 (1)(c) மற்றும் பிரிவு 6 (1c) ஆகியவற்றின் கீழ் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும், கைது செய்யப்பட்ட அனைவரும் புக்கிட் ஜலீல் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here