கனடாவில் இந்திய இளம்பெண் கொடூர கொலை; டிக்டாக்கில் சக ஊழியர் அதிர்ச்சி தகவல்

டொரண்டோ,கனடா நாட்டில் உள்ள வால்மார்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் குர்சிம்ரன் கவுர் (வயது 19). இந்நிலையில், சில நாட்களுக்கு முன் வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி பிரிவில் உள்ள ஓவனில் (அடுப்பில்) உயிரிழந்து கிடந்துள்ளார். அவரின் கருகிய உடலை அதே நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வரும் அவருடைய தாய் பார்த்து அலறி அழுதுள்ளார்.

இதுபற்றிய விசாரணையில், ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் சிலர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி சக பெண் ஊழியர் கிறிஸ் பிரீஸி வெளியிட்ட டிக்டாக் வீடியோவில், வால்மார்ட்டில் இந்த ஓவன் எப்படி வேலை செய்கிறது என கூறியுள்ளார்.

5 அடி ஓர் அங்குலம் உயரம் கொண்டவராக இருக்கும் அவர், தன்னால் உள்ளே செல்ல முடியுமா? என தெரியவில்லை என கூறுகிறார். ஓவனின் உள்ளே அவசரகால பூட்டு ஒன்று இருக்கும். இதுதவிர, ஓவனுக்குள் பணியாளர் சென்று வேலை செய்ய வேண்டிய பணிகள் என எதுவும் கிடையாது என கூறுகிறார்.அதனை தூய்மைப்படுத்தினாலும், இல்லையென்றாலும் கூட நான் ஒருபோதும் உள்ளே சென்றது இல்லை என கூறுகிறார். இந்த ஓவனை பூட்ட வேண்டும் என்றால் கூட அது சுலபமல்ல. உங்கள் சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தி கதவை தள்ளி, பின்னர் பூட்ட வேண்டும் என்று கூறுகிறார். ஓவனின் உள்புறம் ஒருவர் பூட்டி கொள்வதற்கான சாத்தியமும் இல்லை என அந்த வீடியோவில் அவர் கூறுகிறார்.

இதனால், இந்திய பெண்ணின் மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார். 2-வது நபர் ஒருவரே, குர்சிம்ரனை ஓவனுக்குள் தூக்கி வீசியிருக்க வேண்டும் என நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று தி மிர்ரர் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மேரி என்ற மற்றொரு ஊழியர் கூறும்போது, அந்த கதவு தன்னாலேயே மூடி கொள்ளாது. அந்த வகையில் அது வடிவமைக்கப்படவும் இல்லை. அதனை நீங்கள் தள்ள வேண்டும் என்றார். வால்மார்ட் பேக்கரியின் ஓவன்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளி இளம்பெண் மரணம் அடைந்த நிலையில், பேக்கரியில் பணியை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குர்சிம்ரன் கவுரின் மரணம் அடைந்த நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கு வால்மார்ட் கனடா நிறுவனம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here