ஈரோடு: விளைபயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை பிடிப்பது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்தினருக்கும், வனத்துறையினருக்கும் ஏற்பட்ட மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நவ.,5ல் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Advertisement
விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக காட்டுப்பன்றிகள் உருவாகி விட்டன. இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வரும் காட்டுப்பன்றிகள், விளைநிலத்தில் இருக்கும் மொத்த பயிர்களையும் நாசம் செய்து விடுகின்றன. பாதிக்கப்படும் விவசாயிகள் பல்லாண்டுகளாக தொடர்ந்து புகார் செய்தும் அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை. மாறாக, காட்டுப்பன்றியை கொன்றாலோ, கொல்ல முயற்சித்தாலோ, விவசாயிகள் மீது வனச்சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கு தீர்வாக, பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. பரிசீலிப்பதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் தொடர்ந்து உறுதிமொழி அளித்தாலும், பிரச்னை தீர்ந்தபாடில்லை. தற்போது இந்த விவகாரம், ஈரோடு மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தாளவாடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர், தங்கள் விவசாய நிலத்தில் வந்த காட்டுப்பன்றிகளை பிடித்து அடர்ந்த வனத்தில் கொண்டு சென்று விட ஏற்பாடு செய்தனர்.
இதற்கென கர்நாடகாவில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பன்றிகளை பிடித்தனர். இந்த பன்றிகளை வனத்தில் கொண்டு சென்று விட முயற்சித்தபோது, ‘நீங்கள் எப்படி பன்றிகளை பிடிக்கலாம். உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்’ என்று வனத்துறை அதிகாரிகள் வாக்குவாதம் செய்தனர். பன்றிகளை பிடித்தவர்கள், விவசாயிகளை வனத்துறையினர் கைது செய்து தங்கள் வாகனத்தில் அழைத்துச்சென்றனர். இதையறிந்த விவசாயிகள் சங்க தலைவர் குமார ரவிக்குமார் மற்றும் விவசாயிகள், வனத்துறை வாகனங்களை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி, குமார ரவிக்குமார் மீது வனத்துறையினர் புகார் அளித்தனர். போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கி விடுவித்தார். இதனை வெளியே திரண்டிருந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
விவசாயிகள் மத்தியில் குமார ரவிக்குமார் பேசியதாவது:சட்டம், நியாயம் நம் பக்கம் இருக்கிறது. வனத்துறையினர் வேலை வனத்துக்குள் மட்டும் தான். நம் விவசாய நிலத்துக்குள் வரக்கூடாது. வனத்துறையினர் அத்துமீறல்களுக்கு பயப்பட வேண்டாம். நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். வனத்துறையினருக்கு பயப்பட தேவையில்லை. ஐந்தாம் தேதி அனைவரும் தாளவாடி தாலுகா அலுவலகம் முன் குடும்பத்துடன் வந்து விடுங்கள். இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தியே தீர வேண்டும், இவ்வாறு குமார ரவிக்குமார் பேசினார்.
மலையடிவார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பிரச்னை அதிகம். இதற்கு வனத்துறையினரால் எந்த தீர்வும் காண முடியாத நிலையில், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சூடு பிடித்துள்ள இந்த விவகாரம், பிற மாவட்ட விவசாயிகள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, தாளவாடியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ள விவசாயிகள், அதே பாணியில் தங்களது மாவட்டங்களிலும் காட்டுப்பன்றிகளுக்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளனர்.