இந்தோனேசியாவில் வெடித்தது லக்கி-லக்கி எரிமலை; 9 பேர் மரணம்

ஜகார்த்தா:

கிழக்கு இந்தோனேசியாவின் லக்கி-லக்கி எரிமலை குமுறியதில் குறைந்தது 9பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறியதில் அக்கம்பக்க கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான குடியிருப்பாளர்கள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.57 மணிக்கு எரிமலை சீற்றமடைந்ததைத் தொடர்ந்து,செந்நிற தீக்குழம்பு வெளியேறியது. அந்த வெடிப்பில் சாம்பலும் பாறைத் துகள்களும் பறந்து விழுந்தன என்று எரிமலை மற்றும் பூகோள ஆபத்துத் தணிப்பு மையத்தின் பேச்சாளரான ஹாடி விஜாயா இன்று திங்கட்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தார்.

“எரிமலை வெடித்ததும் மின்சாரம் தடைபட்டது. பலத்த மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. அதனால், அக்கம்பக்கத்தில் வசிப்போர் பீதியடைந்தனர்,” என்று அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

நிலைமையை ஆராய்ந்த அதிகாரிகள், எரிமலை ஆபத்து நிலையை நான்காம் நிலை என்னும் உச்சகட்டத்துக்கு உயர்த்தினர்.

எரிமலையைச் சுற்று வட்டாரத்தில் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்போரை பத்திரமாக வெளியேற்றுமாறு அந்த மையம் கேட்டுக்கொண்டது.

வெடித்துச் சிதறிய எரிமலைக் குழம்பும் பாறைகளும் நான்கு கிலோமீட்டர் தூரம் வரை பாதிப்பை ஏற்படுத்தின. அங்கு அமைக்கப்பட்டு இருந்து குடியிருப்புகளைச் சேதமடைந்ததோடு பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்ததாக ஹாடி கூறினார்.

திங்கட்கிழமை காலை வரை குறைந்தபட்சம் ஒன்பது பேர் எரிமலை வெடிப்பால் உயிரிழந்ததாக கிழக்கு ஃபுளோரெஸ் வட்டார உள்ளூர் அதிகாரி ஹெரோனிமஸ் லாமாவுரான் தெரிவித்தார். அத்துடன், ஏழு கிராமங்களையும் எரிமலைச் சீற்றம் சீர்குலைத்ததாக அவர் கூறினார்.

“இன்று (திங்கட்கிழமை) காலை முதல் குடியிருப்பாளர்களை வெளியேற்றத் தொடங்கினோம். கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரத்தில் பத்திரமான இடங்களில் அவர்களைத் தங்க வைத்துள்ளோம்,” என்றும் அந்த அதிகாரி சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here