இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு அவ்வப்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்த நிலையில் கடந்த அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதலும் நடத்தி வருகிறது.
இதனால் கடந்த 13 மாதங்களில் இஸ்ரேல்- லெபனான் சண்டையில் லெபனானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை முடிவடைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்க தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல்- காசா, ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 90 பேர் காயம் அடைந்தனர் எனவும் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 32 ராணுவ வீரர்கள் அடங்குவர். 60 ஆயிரம் மக்கள் இஸ்ரேல் வடக்கு எல்லையில் இருந்து வெளியேறியுள்ளனர்.