நிலவில் தண்ணீர்….. நிஜமானது கணிப்பு- ஆதாரங்களை கூறும் சீன ஆராய்ச்சியாளர்கள்

பெய்ஜிங், ஜூன் 18:

நிலவிற்கு முதலில் விண்கலத்தை அனுப்பியது ரஷியா என்றால், முதலில் மனிதர்களை அனுப்பி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது அமெரிக்கா. 2024 ஆம் ஆண்டிலும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப மும்முரம் காட்டி வருகிறது நாசா. இப்படி ரஷியாவும், அமெரிக்காவும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலவு ஆராய்ச்சிக்குள் தாமதமாக வந்தாலும், பல புதிய தகவல்களை கொடுத்து அனைவரையும் அசர வைத்துள்ளது சீனா.

கடந்த 2020 ஆம் ஆண்டு சீனா நிலவுக்கு அனுப்பிய சேஞ்ச் 5 என்ற ஆளில்லா விண்கலம், நிலவின் மேற்பரப்பில் இருந்த பாறைத்துகள்களை பூமிக்கு எடுத்து வந்திருந்தது அனைவரும் அறிந்திருந்த செய்தி. இந்த கல்பாறை துகள்களை விஞ்ஞானிகள் சோதித்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆராய்ச்சியின் முடிவு அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கெனவே நிலவில் தண்ணீர் இருந்தது என்பதை உறுதிசெய்யும் விதமாக நிலவிலேயே தண்ணீர் உருவானதற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். இதன் மூலம் நிலவில் தண்ணீர் எந்த வடிவத்தில் எவ்வளவு இருக்கிறது என்பது போன்ற அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் எளிதாக்கப்பட உள்ளன.

அதே வேளையில் நிலவில் பரந்த அளவில் நீர்த்தேக்கங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலவின் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் மூலக்கூறுவை பிரித்தெடுக்க தேவையான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தவும் இந்த கண்டுபிடிப்பு உதவ இருக்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும் போது, அவர்களுக்கு தேவையான ஆக்ஜிஜனை உறுதிசெய்ய இந்த ஆராய்ச்சி முடிவுகள் பெரிதும் உதவும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here