மாஸ்கோ,உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 983வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, ரஷியாவின் குர்ஷ்க் மாகாணத்திற்குள் உக்ரைன் வீரர்கள் நுழைந்துள்ளனர். அவர்களை குர்ஷ்க் மாகாணத்தில் இருந்து வெளியேற்றி நகரை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படையினர் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில், குர்ஷ்க் மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் நேற்று ஒரேநாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவ வாகனங்களும் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.