ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று பறக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் இஞ்சின் கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 15 பேர் பலியானதாக தெரிகிறது.
ரஷ்ய ராணுவத்தின் சரக்குகளை கொண்டு செல்லும் அளவில் பெரிய ஐஎல்-76 விமானம், இன்று விபத்துக்கு ஆளானது. ஒரு மாதத்துக்கு முன்னர் உக்ரேனிய போர்க் கைதிகளை கொண்டு சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்துக்கு பின்னர், இந்த இராணுவ விமான விபத்து அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாஸ்கோவின் வடகிழக்கே இவானோவோ பகுதியில் இராணுவ சரக்கு விமானம் தீப்பிடித்து எரிந்தபடி விழுந்து நொறுங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவையும், விமான விபத்து சம்பவம் ரஷ்யாவில் நடந்திருப்பதையும் ’தி மாஸ்கோ டைம்ஸ்’ உறுதி செய்துள்ளது.
இந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் இஞ்சின்களில் ஒன்று தீ பிடித்ததாகவும், தொடர்ந்து அந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஜனவரி மாதத்தில், 65 உக்ரேனிய இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியதில் உக்ரைன் போர்க்கைதிகள் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் உட்பட 74 பேர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.




















