ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தில் தொடர்ந்து மூன்று நாள்களாக அமளி நடந்து வருகிறது.
370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தக் கோரும் தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை கூட்டத்தொடர் கூடியது.
கூட்டத்தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும் 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம், சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சட்டமன்றம் புதன்கிழமை (நவம்பர் 6) கூடிய போது காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் புதன்கிழமை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 7) கூடிய சட்டமன்றத்தில், என்ஜினீயர் ரஷீத்தின் சகோதரர் குர்ஷித் அகமது, சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து பதாகையைக் காண்பித்ததால் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவை வியாழக்கிழமை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) காலை மீண்டும் கூடிய சட்டமன்றக் கூட்டத்தில் மூன்றாவது நாளாக 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்தக் கோரும் தீர்மானத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிடிபி எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பியதால் சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது சட்டப்பிரிவை இனி எந்தக் காலத்திலும் மீண்டும் கொண்டுவர முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கூர்க்கா சமூகத்தினர், ஜம்முவை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.