ஆன்லைனில் வசதியான பெண் அறிமுகம்… விநோத சடங்கால் ரூ.11 லட்சம் இழந்த சீனர்

பீஜிங்,சீனாவில் தியான்ஜின் பகுதியை சேர்ந்த வாங் என்பவர் ஆன்லைன் வழியே திருமணத்திற்கு பெண் தேடியிருக்கிறார். இந்நிலையில், லீ என்பவர், தன்னை வசதி படைத்த பணக்கார பெண் என்றும், தனியாக இருக்கிறேன் என்றும் பல்வேறு சொத்துகள் உள்ளன என்றும் ஒரு புது மண வாழ்க்கைக்கு தயார் என்றும் ஆன்லைனில் தெரிவித்து இருக்கிறார்.

இவரை வாங் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் லீ, திருமணத்திற்கு பின்பு எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், முன்னாள் கணவரின் ஆவியை திருப்திப்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு ஒரு சடங்கு நடத்த வேண்டும்.

இதன்படி, திருமண படுக்கையை எரிக்கும் சடங்கு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். முன்னாள் கணவரிடம் இருந்தே தனக்கு அனைத்து சொத்துகளும் வந்தன என்றும் லீ கூறியிருக்கிறார். இந்த சடங்கு அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இருக்கும் என கூறிய லீ, இந்த சடங்கிற்கான 1 லட்சம் யுவானை (ஏறக்குறைய இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம்) செலவிட்டு வாங் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பணபரிமாற்றம் செய்ய வேண்டும் என கூறிய லீ, அந்த படுக்கையை எரிக்கும் சடங்கை அவருக்கு காட்டவில்லை. ஏனெனில், அது அவருக்கு துரதிர்ஷ்டம் தந்து விடும் என தெரிவித்து இருக்கிறார்.

எனினும், வாங் பணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன்பின்னர், லீயை காணவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் வாங்கிற்கு தெரியவில்லை. லீ தன்னை நம்ப வைத்து பணமோசடி செய்து விட்டார் என அறிந்து கொண்டார். இதனால் வாங் மனமுடைந்து போனதுடன், பணமில்லாமல் தவித்து வருகிறார்.

சீனாவின் சில பகுதிகளில் பழமையான மூடநம்பிக்கைகள், இதுபோன்ற சடங்குகள் பாரம்பரிய முக்கியத்துவம் பெற்று விடுகின்றன. மோசடி செய்பவர்கள் இதனை பயன்படுத்தி காதல், நட்பு என ஆன்லைன் வழியே அன்பை வேண்டுபவர்களை எளிதில் மோசம் செய்து விடுவது சீனாவில் அதிகரித்து காணப்படுகிறது. அதனால், ஆன்லைன் வழியே துணையை தேடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here