கோலாலம்பூர்:
வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பத்தை மனிதவள அமைச்சிடம் சமர்ப்பித்த வங்களாதேச நிறுவன இயக்குநர் ஒருவர், போலி தகவல்களை அளித்த சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டுள்ளார்.
‘டத்தோ’ (Datuk) என மரியாதையைக் குறிக்கும் பட்டத்தைத் தன் பெயருடன் இணைத்திருந்த அந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர், 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், சிலாங்கூரின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு குறித்த ஆடவர், கடந்த திங்கட்கிழமை (நவ.11) சென்றிருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிறுவனத்தின் 600 வெளிநாட்டு ஊழியர்களுக்கான இரண்டு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை ஆடவர் 2023ஆம் ஆண்டு சமர்ப்பித்திருந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்துக்கு, ஊழியர்கள் முற்றிலும் இல்லை என்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு விண்ணப்பங்களுக்கும் முறையே 650,000 ரிங்கிட், 460,000 ரிங்கிட் எனத் தீர்வைக் கட்டணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
இதற்கிடையே, சந்தேக நபர் வரும் நவம்பர் 17ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.