பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் நேற்று ஒரு இளம் பெண்ணின் மரணத்திற்கு வழிவகுத்த விபத்தில் சிக்கிய 51 வயதான டிரெய்லர் ஓட்டுநர் விசாரணைக்கு உதவுவதற்காக நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் முகமட் ஹரித் முகமட் மஸ்லான், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1) இன் கீழ் விசாரணைகளை எளிதாக்கும் வகையில், இன்று முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் போலீஸ் அதிகாரிகளுடன் காலை 8:20 மணிக்கு புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தார். ஊடகவியலாளர்கள் அவரை புகைப்படம் எடுத்தபோது அவர் இரட்டை விரலை (அமைதிக்கான அடையாளத்தை) காண்பித்தார். நேற்று காலை, புக்கிட் மெர்தாஜாமில் ஜாலான் புக்கிட் தெங்காவின் போக்குவரத்து விளக்கு சந்திப்பில் டிரெய்லர் கவிழ்ந்து இரண்டு வாகனங்களை நசுக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே 21 வயது பெண் உயிரிழந்தார். 25 வயது ஆண் ஒருவர் காயம் அடைந்து தற்போது புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செபராங் பிறை தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹெல்மி அரிஸ், நேற்றிரவு டிரைவரைக் கைது செய்ததை உறுதிப்படுத்தினார். சிறுநீர் பரிசோதனை சோதனையில் மது அருந்தவில்லை என்று தெரிய வந்துள்ளது என்றார்.