கோலாலம்பூர்:
ஜோகூர் மாநிலத்தில் உள்ள நிலம்வழிச் சோதனைச்சாவடிகள் வாயிலாக சிங்கப்பூருக்குச் சென்று, பின் அங்கிருந்து மீண்டும் நாடு திரும்பும் மலேசியர்களுக்கான குடிநுழைவுச் செயலியை உள்துறை அமைச்சு தேர்ந்தெடுத்துவிட்டதாக அதன் அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மைடிரிப், மைரென்டாஸ், மைபோர்டர்பாஸ் ஆகிய மூன்று செயலிகளும் சோதனைத் திட்டத்துக்கு உட்படுத்தப்பட்டன.
மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக்கூடிய ஆற்றல் எந்தச் செயலிக்கு அதிகம் உள்ளது என ஆராயப்பட்டதாக சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
அந்த மூன்று செயலிகளில் ஒன்றை மலேசிய உள்துறை அமைச்சு தேர்ந்தெடுத்துள்ளது. நிதி அமைச்சின் அனுமதியைப் பெற எங்கள் பரிந்துரையைக் கடந்த வாரம் சமர்ப்பித்தோம்,” என்று, நேற்று (நவ.13) இரவு சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களுடனான ஒன்றுகூடலின்போது அவர் சொன்னார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட செயலி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் பயணிகள் காத்திருப்பு நேரத்தை அந்தச் செயலி அதிகளவில் குறைத்ததாகவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை செவ்வனே எதிர்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் செயலி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் பயணிகள் தங்கள் கடப்பிதழ்களை குடிநுழைவு அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.
முதல் கட்டமாக, இந்தச் செயலியைப் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் எல்லையைக் கடப்பவர்கள் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
அதன்பிறகு, மலேசியாவில் உள்ள 141 சோதனைச்சாவடிகளிலும் அதைப் பயன்படுத்தலாம்.
மலேசியா-சிங்கப்பூரை நாள்தோறும் கடக்கும் பயணிகளில் ஏறத்தாழ 80 விழுக்காட்டினர் பேருந்து அல்லது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் என்று தரவுகள் காட்டுகின்றன.
“ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்பான விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதிலும் இச்செயலி பங்களிக்கும்,” என்று அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.
இதற்கிடையே, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே கட்டப்பட்டு வரும் விரைவு ரயில் சேவைக்கு ஒற்றைக் குடிநுழைவுச் சோதனைசாவடியை அமைப்பது குறித்து சிங்கப்பூருடன் கலந்துரையாடி வருவதாக அவர் தெரிவித்தார்.








