கோலாலம்பூர்:
மலேசிய முதலீட்டாளர்கள் 122 பேருக்கு சொந்தமான சுமார் 28 மில்லியன் ரிங்கிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி சிங்கப்பூர் ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் முதலீட்டாளர்களால் 2022ஆம் ஆண்டு வழக்கு தொடுத்ததாகக் கூறப்பட்டது.
சான் செ ஷின் எனும் அந்த ஆடவர் சட்டவிரோதமாகச் செயல்பட்டார் என்று உயர் நீதிமன்ற நீதிபதி அரிஃப் எம்ரன் அரிஃபின் கூறினார்.
குற்றவாளி முதலீட்டு நடவடிக்கைகளுக்காகப் பணம் பெறுவதற்கு மலேசியப் பங்குபத்திர ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. எனவே, முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தைச் சான் திருப்பித் தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அந்தப் பணத்திற்கு ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு என்ற கணக்கில் வட்டித் தொகையையும் அவர் தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டித்தொகை, வழக்கு தொடுக்கப்பட்ட நாளிலிருந்து தொகை திருப்பித் தரப்படும் நாள் வரை கணக்கிடப்படும்.
இதன் தொடர்பில் சான் மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஃபுல்டா மலேசியா பர்ஹாட் எனும் நிறுவனத்தைத் தொடங்கிய சான், சாலைக்காட்சிகள், கருத்தரங்குகள் மூலம் சில முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்தினார்.
2016ஆம் ஆண்டு முதல் முதலீட்டாளர்கள் பணம் செலுத்தியதாகத் தெரிகிறது.
முதலீட்டுத் திட்டத்தில் சேரும்போதே இழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை தரப்படுமென்று சான் உறுதிகூறியதாக முதலீட்டாளர்கள் கூறினர்.









