தமிழகத்தில் புதிய வகை பண மோசடி- ‘சைபர் கிரைம்’ போலீசார் எச்சரிக்கை

சென்னை:தமிழகத்தில் புதிய யு.பி.ஐ. மோசடி அரங்கேறி வருகிறது. இந்த மாதம் மட்டும் 7 புகார்கள் ‘சைபர் கிரைம்’ போலீசாருக்கு வந்துள்ளது. இந்த மோசடி எப்படி நடக்கிறது?, பாதுகாப்பு நடைமுறைகள் என்ன? என்பது குறித்து ‘சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரியின் ‘கிஷான் யோஜனா’ என்ற திட்டத்தின் பெயரில் மோசடி செயலியை உருவாக்கி அதனை வாட்ஸ்அப் மூலம் மோசடி கும்பல் பகிர்கிறது. இந்த செயலியின் லிங்கை திறந்தால், பெயர், ஆதார் எண், பான் கார்டு, பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகள் மோசடி கும்பல் கைவசம் சென்றுவிடுகிறது. இந்த தரவுகள் மூலம் யு.பி.ஐ. செயலிகளை பயன்படுத்தி மோசடி கும்பல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதலால் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகின்றனர். மேலும் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் மீது தேவையில்லாத அச்சத்தையும் மோசடி கும்பல் உருவாக்கி உள்ளது.

இதுபோன்ற புதிய வகை மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக்கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். செல்போன்களில் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது. நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here