முதல் கட்டமாக 20 இந்தியர் சிறுதொழில்முனைவோருக்கு
1.5 மில்லியன் ரிங்கிட் மானியம்
–டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்
கோலாலம்பூர், நவ. 28 –
தொழில் முனைவோர் , கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எஸ்எம்இ கார்ப்பின் இந்திய சிறு தொழில்களுக்கான இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக (I-BAP “Indian Business Accelerator Prgramme”) 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
முதல்கட்டமாக 20 இந்திய சிறு தொழில்களுக்கு மொத்தம் 1.5 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது என தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் 61 புதிய விண்ணப்பங்கள் மதிப்பீட்டு பரிசீலனையில் உள்ளன. மொத்தம் 70க்கும் மேற்பட்ட இந்திய சிறு தொழில் முனைவோர்கள் 6 மில்லியன் ரிங்கிட் வரை நிதி உதவிகளைப் பெறுவார்கள் என இங்குள்ள எஸ்எம்இ கார்ப் மண்டபத்தில் நடைபெற்ற நிதி ஒப்புதல் கடிதம் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் 1 லட்சம் ரிங்கிட் வரை மானியங்கள் வழங்கப்பட்டு, தொழில்களின் உற்பத்தித் திறன், மின் வணிகம், சந்தைப்படுத்தல், சுற்றுச்சுழல், நிர்வாக நடைமுறைகளில் மேம்பாடுகள் செய்ய உதவி செய்யப்படும்.
மடானி பொருளாதாரக் கொள்கையின் கீழ், இந்த மானியத் திட்டம் இந்திய சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதை நிரூபிக்கிறது. இந்த உதவியுடன் இந்திய தொழில்முனைவோர் தங்கள் வருமானத்தையும் லாபத்தையும் அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்களிக்க முடியும். ஐஆஅக திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 31, 2024 அன்று முடிவடைந்துள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்திய தொழில்முனைவோரின் தொழில் வளர்ச்சிக்கு வலுவான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது எனவும் பேசிய ரமணன் குறிப்பிட்டார்.







