சென்னை:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாள்களாக விட்டுவிட்டுப் பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் பெருமழை கொட்டுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியில் ஒரே நாளில் 11 cm மழை பதிவாகி உள்ளது.
இந்த கனமழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரானது மழை நீரோடு சேர்ந்து உப்பளங்களை மூழ்கடித்துள்ளது.
இதனால் மரக்காணத்தில் உள்ள சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏராளமான உப்பளங்கள் மழை நீரில் மூழ்கித் தற்போது பெரிய ஏரி போல் காட்சியளிக்கிறது. உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தத் தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி உற்பத்தி அடியோடு அழிந்து விட்டதால் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள மழையால் பாதிக்கப்பட்டுள்ள உப்பளத் தொழிலாளர்கள் தங்களுக்கு வெள்ள நிவாரணம் கேட்டு தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.