ஃபெங்கல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் மூடல்; 55 விமானங்கள் ரத்து

சென்னை:

ஃபெங்கல் புயல் (Fengal Cyclone) காரணமாக சென்னைக்கு வரும் விமானமும் புறப்படும் விமானமும் தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) மாலை, காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் காரணமாக பெரும்பாலான நிறுவனங்ககளும், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் பொதுமக்களும் தங்களது வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர்.

ஃபெங்கல் புயல், கனமழை காரணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், அதேபோல் சென்னைக்கு வரும் விமானங்கள் அனைத்தையும் சனிக்கிழமை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது.

பயணிகளின் பாதுகாப்பு, விமான ஊழியர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வானிலை சீரடைந்த பின்பு மீண்டும் விமானச் சேவைகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உட்பட மற்ற விமான நிறுவனங்கள் இதுவரையில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால் பயணிகள் தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாக ‘நியூஸ் 18’ ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபெங்கல் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ஃபெங்கல் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை கொட்டிவரும் நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 19 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 1ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் கோல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வர், புனே நகரங்களுக்குச் செல்லும் ஒன்பது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

விமானப் புறப்பாடு நேரத்தை அறிந்துகொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு பயணிகளுக்கு விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here