வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2ஆவது SPM அமர்வை நடத்துங்கள்: முன்னாள் கல்வி அமைச்சர்

ஷா ஆலம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கான எஸ்பிஎம் தேர்விற்கான அமர்வை இரண்டாவது முறை நடத்துமாறு முன்னாள் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று முன்னதாக, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட SPM மாணவர்கள் திட்டமிட்டபடி அவர்கள் தேர்வு எழுதுவதை உறுதி செய்வதற்காக விடுதிகள் அல்லது மாற்று தேர்வு மையங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியிருந்தன் தொடர்பில் முன்னாள் கல்வி அமைச்சர் தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்னொரு விருப்பம் இருக்கிறது. தேவைப்பட்டால், அட்டவணையை மதிப்பாய்வு செய்து, பாதிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு இரண்டாவது அமர்வு நடத்தலாம். இது கடினம் அல்ல என்று பெர்சத்து துணைத் தலைவரான ராட்ஸி கூறினார். பாதிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் தேர்வு எழுத வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று சொல்வது எளிது. ஆனால் அவர்களின் நிலைமையை நாம் யோசித்து பார்க்க வேண்டும் என்று அவர் பெர்சத்துவின் ஆண்டுக்கூட்டத்தின் போது தனது உரையின் போது கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் 5,377 SPM தேர்வினை எழுதவிருக்கும் மாணவர்கள் மாற்று இடங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என ஃபட்லினா கூறினார். அவர்கள் கிளந்தனில் 3,111, தெரெங்கானுவில் 1,734 மற்றும் கெடாவில் 532 பேர் உள்ளனர். பெர்னாமா அறிக்கை ஒன்றில், நாளை முதல் வியாழன் வரை திட்டமிட்டபடி அனைத்து வெள்ளம் பாதித்த மாநிலங்களிலும் SPM மலாய் மொழி வாய்மொழித் தேர்வை கல்வி அமைச்சகம் தொடரும் என்று ஃபட்லினா கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மற்றும் மலேசிய வானிலை சேவைகள் துறை போன்ற அதிகாரிகளின் ஆலோசனையின் பின்னர், வடகிழக்கு பருவமழை பிப்ரவரியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் முன்னறிவிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இன்று நண்பகல் நிலவரப்படி ஒன்பது மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 153,411 பேர் உள்ள 686 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தேசிய பேரிடர் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.  வெள்ளப் பெருக்கால் இதுவரை மூவர் பலியாகி இருக்கின்றனர். கிளந்தானில் 97,131 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தெரெங்கானு (43,273), கெடா (9,129), நெகிரி செம்பிலான் (1,915), பகாங் (762), ஜோகூர் (627), மலாக்கா (298), பெர்லிஸ் (188) மற்றும் சிலாங்கூர் (88).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here