புத்ராஜெயா:
பத்து பூத்தே விவகாரம் உட்பட மேலும் சில விவகாரங்களில் நாட்டின் இறையாண்மை விட்டுக் கொடுக்கப்பட்ட விஷயத்தில் நிகழ்ந்திருக்கும் தவறுகள் நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்றுக் கருத்துரைத்தார்.
பத்துபூத்தே, பத்துவான் தெங்கா, துபிர் செலாத்தான் ஆகிய பகுதிகளுக்கான இறையாண்மை சம்பந்தப்பட்ட வழக்குத் தொடர்பில் அது நடத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அரச விசாரணைக் குழுவின் அறிக்கை பற்றி அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
இந்த விஷயத்தில் பலவீனங்கள் இருப்பதை அந்தக் குழுவின் அறிக்கை தெளிவாகக் காட்டி இருக்கிறது. இது சாதாரண விஷயமல்ல என்று பிரதமர் யாரையும் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார். நாட்டிற்குச் சொந்தமான ஒவ்வோர் அடி நிலத்தையும் கடைசி வரை தற்காப்பதற்குப் போராட வேண்டும் என்று அவர் சொன்னார்.ஆயினும் இந்த விஷயத்தை சட்டத்திடம் விட்டு விடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அரச விசாரணைக் குழு இந்த விவகாரத்தில் பலவீனங்கள் இருப்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. நமக்குச் சொந்தமான ஒவ்வோர் அங்குல நிலத்தையும் தற்காக்க நாம் கடைசி வரை போராட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் துரோகம் நடந்திருப்பதை அந்தக் குழு அம்பலப்படுத்தி இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில் இது சாதாரண விஷயமல்ல. இறையாண்மை விட்டுக் கொடுக்கப்பட்டிருப்பது தொடர்பான குற்றம் மிகப்பெரிய துரோகமாகும் என்று அவர் சொன்னார். முன்னதாகப் பிரதமர் பிரிசின்ட் 14இல் உள்ள சூராவ் அல் மனாரில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவு செய்த பின் நிருபர்களிடம் பேசினார்.