கேரள நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த இயக்குனர் திடீர் மரணம்

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு சினிமா சூட்டிங் முடித்து விட்டு கொச்சியில் இருந்து தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியது.

மேலும் அந்த காட்சிகளை அந்த கும்பல் வீடியோவும் எடுத்திருக்கிறது. கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பிரபல நடிகர் திலீப்பும் ஒருவர் ஆவார்.

நடிகை மீதான பாலியல் தாக்குதல் வழக்கின் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டிருக்கிறார். வழக்கின் 8-வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டது. 84 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கின் இறுதிக்கக்கட்ட விசாரணை தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியும், நடிகர் திலீப்புக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தவருமான பிரபல இயக்குனர் பால சந்திரகுமார் திடீரென மரணம் அடைந்தார்.

சிறுநீரகம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், செங்கனூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் தான் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார்.

நடிகர் திலீப்பும், இயக்குனர் பால சந்திரகுமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அப்படி இருந்த நிலையில் தான் நடிகை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிரான கருத்துக்களை இயக்குனர் பாலசந்திரகுமார் தெரிவித்தார்.

நடிகை பாலியல் தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியை நடிகர் திலீப் வீட்டில் பார்த்ததாகவும், நடிகை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ காட்சி திலீப்பிடம் இருப்பதாகவும், விசாரணை அதிகாரிகளுக்கு அவர் ஆபத்து ஏற்படுத்த முயன்றதாகவும் பாலசந்திரகுமார் வாக்குமூலம் அளித்தார்.

அவரது இந்த வாக்கு மூலம் நடிகை பாலியல் தாக்குதல் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் திலீப் மீது கொலைக்கு சதி செய்ததாகவும், சாட்சியங்களை அழித்ததாகவும் வழக்கு பதியப்பட்டது.
இயக்குனர் பாலசந்திர குமாரின் உடல் செங்கனூர் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here