என்னதான் காப்பி, ஜூஸ் என இருந்தாலும் உலகம் முழுவதிலும் மக்களுக்கு விருமபான பானமாக என்றும் முதலிடத்தில் உள்ளது தேநீர் ஒன்றே ஆகும். அத்தகைய தேநீரின் சிறப்புகளை பறைசாற்றும் விதத்தில் வருடந்தோறும் டிசம்வர் 15 உலக தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகெங்கிலும் தேயிலையின் நீண்ட வரலாறு மற்றும் அதன் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, வங்கதேசம், கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, தான்சானியா ஆகியவை தேயிலை உற்பத்திக்கு பெயர் போன நாடுகள் கொண்டாடுகிறது.
இந்தியாவில் முதல் சர்வதேச தேயிலை தினம் டிசம்பர் 15, 2005 இல் புது டெல்லியில் கொண்டாடப்பட்டது. சுமார் 5,000 ஆண்டுகள் சீனப் பேரரசர் ஷென் நங் தற்செயலாக தேயிலையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அவரது ஆட்களுடன் ஒரு மரத்தடியில் அமர்ந்து தண்ணீர் கொதிக்க வைக்கும்போது, காற்றில் பறந்த தேயிலை இலைகள் பானையில் விழுந்துள்ளது.
இது தண்ணீருக்கு சுவையூட்டிய நிலையில் அதுவே உலகின் முதல் தேநீர் பானம் என்றானது. அன்றுதொட்டு கலாச்சார பரிமாற்றங்கள் மூலம் தேயிலை வளர்ப்பு உலகம் முழுவதும் பரவி உள்ளது.தேயிலை வளர்ப்பு அதிகப்படியான பொருளாதார சந்தையாக மாறினாலும், இலங்கை, இந்தியா, மலேசியா என கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தை காரணமாக வைத்து தமிழர்கள் உட்பட பல இன மற்றும் மொழிக் குழுக்களை சேர்ந்த மக்கள் தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்த சரித்திரத்தையும் இந்நாளில் நினைவு கூற வேண்டியது அவசியமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை 2019 இல் மே 21 ஆம் தேதியை ஒரு புதிய சர்வதேச தேயிலை தினமாக அறிவித்திருந்தாலும் 2005 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட மேற்கூறிய முக்கிய தேயிலை உற்பத்தி நாடுகளில் டிசம்பர் 15 ஆம் தேதி உலக தேநீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.