உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்ரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தத்திற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
தற்போது உக்ரைன் அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்துவதால், ரஷியாவும் உக்ரைனுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.இந்த நிலையில் ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் இருந்து 800 கி.மீ. தொலைவில் உள்ள கசான் நகர் (டார்டஸ்டன் குடியரசு தலைநகர்) மீது உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் இரண்டு டிரோன்கள் மக்கள் வசித்து வரும் மிகப்பெரிய கட்டடங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிகிறது. இந்த டிரோன் தாக்குதல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதே ஸ்டைலில் தற்போது ரஷியா மீது உக்ரைன தாக்குதல் நடத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
கசான் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் வசித்து வரும் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குடியிருப்புவாசிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாதுகாப்பாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது.
இன்று மிகப்பெரிய டிரோன் தாக்குதலால் கசான் பாதிப்படைந்தது. முன்னதாக இன்டஸ்ட்ரியல் என்டர்பிரைசஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று காலை மக்கள் வசிக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என டார்டஸ்டன் குடியரசு தலைவர் ருஸ்டாம் மின்னிகானோவ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் பதில் ஏதும் அளிக்கவில்லை.இன்று காலை சுமார் இரண்டு மணி நேரத்தில் மூன்று முறை அலை அலையாக டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. 6 டிரோனகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எத்தனை டிரோன்கள் தாக்குதல் நடத்தியது என்பதை கூறு இயலாது என ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.