கோலாலம்பூர்:
நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் பொருளாதார, வாழ்க்கைத் தரத்தையும் அதிகரிக்க இவ்வாண்டு பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணை அமைச்சர் ஆர். ரமணனின் ஏற்பாட்டில் இந்த ஆண்டில் இதுவரை ஏழு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஓர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டமும் (SPUMI) இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டு நிதித் திறனளிப்புத் திட்டமும் (SPUMI Goes Big) என்பன அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களில் சில என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தகக் குழும பொருளாதார நிதியத்தின்கீழ் (TEKUN) அமல்படுத்தப்பட்ட நிதித் திறனளிப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த நடவடிக்கையின் மூலம் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர்19) வரை 2,355 இந்தியத் தொழில்முனைவோர்கள் பயன்பெற்று உள்ளனர். இது தவிர, 3,285 இந்தியப் பெண் தொழில்முனைவோர் 30.34 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி பெற்று உள்ளனர்.PENN என்னும் இந்த திட்டம் வாயிலாக டிசம்பர் 13 வரை அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை அது என்றும் அவர் சொன்னார்.
அடுத்ததாக, இந்திய வர்த்தக சமூகத்துக்கான ஆதரவை அதிகரிக்கும் வகையில், பேங்க் ரக்யாட் மூலம் இந்தியத் தொழில்முனைவோர் நிதி-ஐ (BRIEF-i) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியத் தொழில்முனைவோருக்கு 50,000 ரிங்கிட் வரை உதவி அளிக்கும் திட்டம் அது.
கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 19) வரை 451 இந்தியத் தொழில்முனைவோர் அந்தத் திட்டத்தின் மூலம் பலனடைந்து உள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 40.39 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டங்கள் ஒருபுறம் இருக்க, இந்தியர்களின் சிறு, குறு வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ வர்த்தக வேகவளர்ச்சித் திட்டம் ஒன்றும் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அந்த ஆறு மில்லியன் ரிங்கிட் திட்டத்தின்கீழ் இதுவரை 20 சிறு வர்த்தக நிறுவனங்களுக்கு 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.