கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். எப்படி தேவர்களை சங்கடப்படுத்திய அசுரர்களை முருகப்பெருமான் அழித்தாரோ அதேபோல் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்களை தரக்கூடிய எதிரிகள் அல்லது துரோகிகளை நம்மிடம் இருந்து விலக்கி நமக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை தருவார், அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இதற்கு முதலில் நாம் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். என்றைக்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதோ அந்த நாளில் செல்லலாம். அந்த கோவிலில் கண்டிப்பான முறையில் தினமும் முருகனுக்கு அபிஷேகம் நடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது முருகப்பெருமானின் ஆலயத்தில் இருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும்.
எடுத்து வந்த இந்த மண்ணை வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாளத்தை வைத்து அதில் சிவப்பு நிற துணியை விரித்து அதற்கு மேல் வைத்து விட வேண்டும். இப்படி நாம் மண் எடுத்து வந்ததற்குப் பிறகு வரக்கூடிய செவ்வாய்க்கிழமை, சஷ்டி அல்லது கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில் எந்த நாள் முதலில் வருகிறதோ அந்த நாளில் நாம் விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.
காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் நாம் மண் எடுத்து வைத்திருந்த மண்ணிற்கு மேல் வீட்டில் இருக்கக்கூடிய முருகன் சிலை, முருகனின் வேல், முருகனின் சேவல் கொடி அல்லது முருகனின் சிறிய படம் எதுவாக இருந்தாலும் அதை வைத்துக் கொள்ள வேண்டும். முருகனுக்கு சந்தனம் குங்குமம் வைத்து வாசனை நிறைந்த மலர்களாக அலங்காரம் செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக முருகனுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். அடுத்ததாக முருகனின் சத்துரு சம்ஹார வேல் பதிகத்தில் ஒரு பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்.
‘சண்முக கடவுள் போற்றி சரவண துதித்தாய் போற்றி கண்மணி முருகன் போற்றி கார்த்திகை பாலா போற்றி தன்மலர் கடம்ப மாலை தாங்கிய தோழா போற்றி விண்மதி வதன வள்ளி வேலவா போற்றி போற்றி!!!’
இந்த பதிகத்தை மூன்று முறை படித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அன்றைய தினம் ஒரு வேளை மட்டும் உணவெடுத்து விரதம் இருக்க வேண்டும். மாலை நேரத்தில் சாதாரணமாக தீபம் ஏற்றி வழிபாடு செய்வது போல் வழிபாடு செய்து கொள்ளுங்கள்.
இதே போல் அடுத்த நாளும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியம் வைத்து இந்த பதிகத்தை மூன்று முறை படிக்க வேண்டும் அன்று மாலை தீபம் ஏற்றி முடித்த பிறகு உங்களுடைய விரதத்தை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இரண்டு நாட்கள் விரதம் பூர்த்தி அடைந்த பிறகு முருகனை எப்பொழுதும் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு அந்த மண்ணை நாம் எந்த கோவிலில் இருந்து எடுத்து வந்தோமோ அந்த கோவிலுக்கு எடுத்துச் சென்று ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு வரவேண்டும்.




















