திண்டிவனம்:
சென்னை எழும்பூரிலிருந்து திங்கட்கிழமை (டிசம்பர் 23) காலை 6 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரயில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்டவாளத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் திண்டிவம் நோக்கி ரயில் பயணத்தைத் தொடர்ந்தது. ரயில் ஓட்டுநர் உடனடியாகத் தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.