ஈப்போ: கம்போங் காஜா, சங்காட் லாடாவில் உள்ள கால்வாயில் நீந்தியபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 39 வயது போலீஸ் கார்ப்ரல் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த கார்ப்ரல் முஹம்மது தௌபிக் சயுதி 39, களைப்பாக இருந்ததாகவும் ஆனால் அவர் நீரில் இருந்து நிலப்பரப்பை அடைய முயன்றதாகவும் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை (டிசம்பர் 23) அதிகாலை 4.55 மணியளவில் உயிரிழந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார். கட்டுப்பாட்டு மையத்திலிருந்து (பிகேபி) 3 மீ தொலைவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் திங்கள்கிழமை (டிச. 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22), பாதிக்கப்பட்டவர் செகோலா மெனெங்கா கெபாங்சான் (எஸ்எம்கே) சங்காட் லாடாங் முன்னாள் மாணவர்களுடன் மறு இணைவு விழாவில் கலந்துகொண்டு நண்பர்களுடன் நீராடும்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.