11 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மன்மோகன் சிங் முதலில் கேட்ட விசயம்…? நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த டாக்டர்

புதுடெல்லி,முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் (வயது 92) திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

2009-ம் ஆண்டில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதுபற்றி அவருக்கு சிகிச்சையளித்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராமகாந்த் பண்டா நினைவுகூர்ந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, டாக்டர் மன்மோகன் சிங் அப்போது பிரதமராக இருந்த காலகட்டம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. 10 முதல் 11 மணிநேரம் வரை இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நாங்கள் இருதய அறுவை சிகிச்சையை முடித்த பின்னர், இரவில், சிங்கின் சுவாசத்திற்காக இணைக்கப்பட்ட செயற்கை குழாயை நீக்கினோம். அப்போது, பேச கூடிய அளவில் இருந்த சிங் என்னை நோக்கி முதலில் கேட்ட கேள்வி, என்னுடைய நாடு எப்படி உள்ளது? காஷ்மீர் எப்படி உள்ளது? என்று கேட்டார்.

நான் அவரிடம், ஆனால் நீங்கள் உங்களுக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை பற்றி எதுவுமே என்னிடம் கேட்கவில்லை என கூறினேன். அதற்கு அவர், நீங்கள் சிறந்த முறையில் பணியை செய்வீர்கள் என எனக்கு தெரியும் என கூறினார் என்று டாக்டர் பண்டா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here