2024 செப்டம்பர் நிலவரப்படி இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.60.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 4.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டு கடன் விகிதம் கடந்த ஜூன் மாதம் 18.8 விழுக்காடாக இருந்த நிலையில், செப்டம்பா் மாதம் 19.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அரசாங்கம் மட்டுமின்றி தனியார் துறைகளின் வெளிநாட்டுக் கடனும் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டுக் கடன் மதிப்பில் ‘கடன்’ 33 விழுக்காடாகவும், பணம் மற்றும் சேமிப்பு 23.1 விழுக்காடாகவும், வா்த்தக கடன் 18.3 விழுக்காடாகவும், கடன் பத்திரங்கள் 17.2 விழுக்காடாகவும் உள்ளன என்பது நிதியமைச்சின் தரவுகளின் வழி தெரியவந்துள்ளது.
வெளிநாட்டுக் கடன் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும், இந்தியா மேலும் பல மேம்பாட்டுப் பணிகளுக்காக கடன்களை வாங்கிக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் இந்தியாவில் பசுமை மற்றும் நீடித்த உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்த, ஆசிய வளர்ச்சி வங்கி, 4,250 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.
இதற்கு முன்னர், நாட்டின் சரக்குகளைக் கையாளும் திறன் மேம்பாட்டிற்கு 2,940 கோடி ரூபாய் கடன் வழங்க, இந்த வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இப்போது மற்றொரு கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடன் தொகை, மத்திய அரசின்கீழ் இயங்கும் ஐஐஎஃப்சிஎல் எனும் இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.