கோலாலம்பூர்: தாய்லாந்து – மலேசியா இருதரப்பு உறவு ஒரு புதிய இலக்கை எட்டியுள்ளது. இரு நாடுகளின் பிரதமர்களும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியம்போங்சா இந்த உத்வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா இடையேயான வலுவான பிணைப்பு எதிர்காலத்திற்கான பாதையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டார்.
பிரதமர் அன்வார், பிரதமர் பேடோங்டார்ன் ஆகியோரின் தலைமையின் கீழ், மலேசியா, தாய்லாந்து ஒத்துழைப்பு கண்டுள்ளன. குறிப்பாக (இரு நாடுகளின்) எல்லைப் பகுதிகளில் இரு தலைவர்களும் சந்திக்கும் போதெல்லாம், அவர்களுக்கு இடையேயான வலுவான பிணைப்பை என்னால் காண முடிகிறது. தாய்லாந்தும் மலேசியாவும் வர்த்தகம், முதலீட்டில் மட்டுமல்லாமல், மனித பாதுகாப்பிலும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சமீபத்தில் இங்கு நடைபெற்ற 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய உச்சநிலை மாநாடுகளின் போது பெர்னாமாவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் கூறினார்.
இரு தலைவர்களுக்கும் இடையே நிறுவப்பட்ட வழக்கமான தகவல்தொடர்புகள் பரஸ்பர புரிதலை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் மேலும் மூலோபாய ஒத்துழைப்புக்கு வழி வகுக்க உதவியுள்ளன. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் வலுவாக உள்ளன. 2024 ஆம் ஆண்டில், தாய்லாந்து மலேசியாவின் உலகளவில் ஏழாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், ஆசியானுக்குள் மூன்றாவது பெரிய நாடாகவும் இருந்தது. மொத்த வர்த்தகம் US$25.03 பில்லியன் (RM114.56 பில்லியன்) ஆகும். இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், இருதரப்பு வர்த்தகம் US$3.96 பில்லியன் (RM17.65 பில்லியன்) ஆக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் US$3.67 பில்லியன் (RM16.80 பில்லியன்) ஆக இருந்தது.
அன்வாரும் பேடோங்டார்னும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். அவர்கள் ஒரு செழிப்பான பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். வர்த்தகம், முதலீடுகளைத் தூண்டுவதன் மூலமும், சிறந்த இணைப்பை மேம்படுத்துவதற்காக எல்லை தாண்டிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும் பகிரப்பட்ட எல்லையை அடைய முடியும். எல்லை தாண்டிய வர்த்தகம், முதலீட்டை அதிகரிக்க சிறப்பு எல்லை பொருளாதார மண்டலங்களை (SBEZs) ஒருங்கிணைப்பதற்கும் இரு தரப்பினரும் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
தாய்லாந்து -மலேசிய எல்லையில் உள்ள பொருளாதார நடவடிக்கைகள் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளாகும். தற்போது எல்லை வர்த்தகம் இருதரப்பு வர்த்தகத்தில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது. மலேசியா, தாய்லாந்து இடையேயான எல்லைப் பகுதிகளின் கூட்டு வளர்ச்சி பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று மாரிஸ் விவரித்தார்.
வளர்ந்து வரும் ஹலால் தொழில், செம்பனை, ரப்பர் துறைகள் போன்ற பெரிய ஆற்றலுடன் கூடிய எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மேலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் எடுத்துரைத்தார். இருவரும் கடந்த வாரம் கோலாலம்பூரில் நடந்த 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் சந்தித்தனர். இந்த ஆண்டு இறுதியில் சடாவோ-புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் பகுதியில் கூட்டு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.





















