பெங்களூரு:
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இரு குழந்தைகளுக்கு ‘Human Metapneumovirus (HMPV) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அவ்விரு குழந்தைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மூன்று மாதக் குழந்தை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டது; இன்னொரு குழந்தைக்கு இன்னமும் சிகிச்சை தொடர்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் HMPV தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, HMPV கிருமி நீண்டகாலமாகவே இருந்து வருகிறது என்றும் அதனால் இந்தியாவில் அக்கிருமி தொற்றியிருப்பது இதுவே முதன்முறை எனக் கூறுவது தவறானது என்றும் கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிலைமையை ஆராய்ந்து வருவதால் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
அவ்விரு குழந்தைகளும் வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கவில்லை. அதனால், பிற வட்டாரங்களில் அல்லது நாடுகளிலிருந்து அக்கிருமி பரவியிருக்க வாய்ப்பில்லை என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.