கோலாலம்பூர் :
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இன்று ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவை வந்தடைந்துள்ளார்.
பிரபோவோ மற்றும் அவரது குழுவினரை ஏற்றி வந்த சிறப்பு விமானம் காலை 10.15 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) உள்ள புங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது.
மலேசியா வந்தடைந்த அவரை வெளியுறவுதுறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன் மற்றும் மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் டத்தோ ஹெர்மோனோ ஆகியோர் வரவேற்றனர்.
அத்தோடு கேப்டன் ராஜா அஸ்ரி சியாஹிர் தலைமையிலான ரோயல் ரேஞ்சர் படைப்பிரிவின் முதல் பட்டாலியனின் 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பிரபோவோ இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திப்பார் என்றும், அதைத் தொடர்ந்து மதிய உணவுக்கு உபசரிப்பிற்கு பின் இன்று பிற்பகல் நாடு திரும்புவார் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பதவியேற்ற பிறகு பிரபோவோ மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பணி நோக்கு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.