கோலாலம்பூர்:
“Magic mushroom” என மின்சிகரெட்டில் பயன்படுத்தப்படும் திரவமானது உண்மையில் செயற்கை கஞ்சா என்று தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பின் (Nada) தலைமை இயக்குனர் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த ‘Magic mushroom’ ஐ பயன்படுத்தியதாகக் கூறிய போதைப்பித்தர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட 50 மாதிரிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

இந்த ‘Magic mushroom’ என்ற வார்த்தை போதைப்பொருள்தான் பாவிக்கிறோம் என்று தெரியாமல் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், இந்த செயற்கை போதைபொருள் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்துள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
கவர்ச்சியான வார்த்தைகள் கொண்ட உணவுப்பண்டங்கள், பானங்கள் என நாளுக்கு நாள் புதிதாக முளைக்கும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் செயற்கைப் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.





















