ஜார்ஜ்டவுன்,
அமலாக்கப் பிரிவு, அவை சார்ந்த துறைகளின் அதிகாரிகள் முறைகேடாகச் செயல்படுவதாக நினைக்கும் பொதுமக்கள் புகார் அளிக்க முன்வரத் தயங்குவதால் விசாரணைகள் தடைபடுகின்றன என்று இண்டர்கிராட்டி கமிஷன் எனப்படும் உயர்நெறி ஆணையம் தெரிவித்தது.அமலாக்கத்துறை, அவை தொடர்புடைய ஏஜென்சிகளின் அதிகாரிகள் நேர்மையாகச் செயல்படுவதற்கு பொதுமக்கள் தாராளமாக உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும்.
புகார்கள் வந்தால் மட்டுமே குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும். சம்பந்தப்பட்ட புகார்களுக்கும் தீர்வு பிறக்கும் என்று ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் ஹாஜி பக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக உயர்நெறி ஆணையம் திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களுடன் இணைந்து ஊழல், முறைகேடுகள், அதிகாரத் துஷ்பிரயோங்கங்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு முடிவுகளை முன்னெடுத்திருக்கிறது. இருப்பினும் பொதுமக்கள் வாக்குமூலம் அளிப்பதற்கும் சரியான தகவல்களை வழங்குவதற்கும் மறுப்பது அல்லது தயங்குவது ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.
இவ்விவகாரத்தில் பொதுமக்கள் ஒரு நிலையான, உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. இதனால் விசாரணைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் சவால்மிக்கதாகவும் உள்ளது. அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோரின் முறைகேடான நடவடிக்கைகள் குறித்து புகார் செய்வதற்கு மக்கள் தயங்கக்கூடாது. இந்தத் தயக்கம் உண்மையான நிலைமைகளைத் திரைபோட்டு மறைத்து விடுகிறது என்று டான்ஸ்ரீ இஸ்மாயில் தெரிவித்தார்.
பொதுமக்களுள் சிலர் கடிதங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி . ஆகியவற்றின் மூலமாக தெரிவிக்கும் புகார்களில் அவர்களின் பெயர், அடையாள அட்டை எண், முகவரி போன்ற தகவல்களைத் தவறாக வழங்குகின்றனர். இது விசாரணை நடவடிக்கைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், உயர்நெறி ஆணையம் புகார்தாரர்களின் விவரங்களை முறையாகப் பாதுகாத்து ரகசியமாக வைத்திருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறது என்று சொன்னார் .

புகார் வழங்கும் நபர்களுக்கு அல்லது பொதுமக்களுக்கு ஆபத்தோ பாதிப்போ ஏற்பட்டால் அதற்குக் காரணமான அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஈராண்டு சிறை அல்லது ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கக்கூடிய குற்றச்செயலின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பினாங்கில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் டான்ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் உயர்நெறி ஆணையம், அதன் கடமைகள் குறித்து விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநிலப் போலீஸ், குடிநுழைவு இலாகா, சுங்க இலாகா ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளும் 70க்கும் அதிகமான அதிகாரிகளும் பங்கேற்றனர். உயர்நெறி ஆணையம் மீதான நம்பிக்கை பொதுமக்களிடையே
அதிகரிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களின் புகார்களைக் கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கலாம். தொடக்கத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருந்த புகார்கள் காலப்போக்கில் அதிகரித்து வருவது உயர்நெறி ஆணையத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது என்று அவர் கூறினார்.





























