டிரம்ப் செய்வது சரியல்ல.. அமெரிக்காவில் வெடித்த போராட்டம்

வாஷிங்டன்:அமெரிக்காவின் நலன்களுக்காக பெரிய அளவில் மாற்றங்களை செய்யப்போவதாக கூறி ஆட்சிக்கு வந்த டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் உத்தரவு, கால நிலைமாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகல், உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகல், காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை தற்காலிகமாக வெளியேற்றுதல் என அவரது நடவடிக்கை அனைத்தும் உலக அரங்கில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறை முதல் திருநங்கை உரிமைகள் ரத்து மற்றும் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை மாற்றும் திட்டம் வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்து இப்பேராட்டம் நடைபெறுகிறது.

பிலடெல்பியா, கலிபோர்னியா, மின்னசோட்டா, மிச்சிகன், டெக்சாஸ், விஸ்கான்சின், இண்டியானா மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள மாநிலங்களிலும் நேற்று ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினர். புதிய அரசாங்கத்தின் செயல்திறன் துறை தலைவர் எலான் மஸ்க், அரசின் செயல்திட்டம் 2025 ஆகியவற்றுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். கண்டன பதாகைகளுடன் பேரணியாகவும் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here