AI மாநாட்டிற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி – இன்று பிரான்ஸ் பயணம்

புதுடெல்லி:அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி, டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசினார்கள்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களி டம் கூறுகையில், ‘அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மாளிகைக்கு வருவார்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை செயற்கை நுண்ணறிவு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகலில் டெல்லியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் செல்கிறார்.

இன்று இரவு பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை (11-ந்தேதி) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாட்டுக்கு அதிபர் மேக்ரானுடன் இணைந்து தலைமை தாங்குகிறார்.

இந்த உச்சி மாநாட்டில் அரசுத்துறை அதிகாரிகள், சிறு மற்றும் பெரு நிறுவ னங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்களின் அதி காரிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், கல்வியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நாளை பிற்பகலில் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தலைமையில், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான வட்டமேசை கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகிய இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.பின்னர் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் அங்குள்ள போர் நினைவிடத்துக்கு செல்கிறார்கள். அங்கு முதலாம் உலகப்போரில் உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.பின்னர் சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை அமைந்துள்ள கடாரச்சி பகுதியையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இந்தியாவும் அதில் பங்குதாரராக உள்ளது.அதன்பிறகு பிரான்ஸ் நாட்டின் மார்சேய் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு இந்தியாவின் துணை தூதரகத்தை திறந்து வைக்கிறார். அதன் பின்னர், இருதரப்பு உறவுகள் குறித்து பிரான்ஸ் அதிபருடன், பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

பின்னர் பிரான்சில் இருந்து புறப்பட்டு பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். வருகிற 13-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று இரவு டிரம்ப் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட உள்ளது. வருகிற 14-ந்தேதி அமெரிக்க தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு அவர் நாடு திரும்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here