மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் – படம் வரைந்து காட்டிக் கொடுத்த 5 வயது மகள்

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தீப் புதோலியா. இவர் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு சோனாலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போதே சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதியிடம் இருந்து ரூ.20 லட்சத்தை சந்தீப் வரதட்சணையாக பெற்றுள்ளார். ஆனால் அதன் பிறகு தனக்கு கார் வேண்டும் என்று சோனாலியின் தந்தையிடம் சந்தீப் கேட்டுள்ளார்.

இதனால் குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டு, பின்னர் போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையில் சோனாலிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சந்தீப்பின் குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்ததாகவும், பெண் குழந்தையை பெற்றெடுத்த சோனாலியை மருத்துவமனையில் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ஒருமாதம் கழித்து சோனாலியையும், பெண் குழந்தையையும் சந்தீப் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் வரதட்சணை கேட்டு சந்தீப்பின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால், சோனாலி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சுமார் 2 ஆண்டுகளாக சோனாலியும், சந்தீப்பும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் சோனாலியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சந்தீப் அழைத்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் இணைந்து பேசி, இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சந்தீப்பின் குடும்பத்தினர் சோனாலியின் தந்தையை தொலைபேசியில் அழைத்து, அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து சோனாலியின் பெற்றோர் சந்தீப்பின் வீட்டிற்கு சென்று, தங்கள் மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சோனாலியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சோனாலியின் 5 வயது குழந்தை தர்ஷிகா, தனது தாயை தனது தந்தை கொலை செய்துவிட்டதாகவும், பின்னர் அதனை தற்கொலை என்று கூறினார் என்றும் அழுதுகொண்டே தெரிவித்தார். இது குறித்து போலீஸார் விசாரித்தபோது, சோனாலியை சந்தீப் தாக்கியது குறித்து படம் ஒன்றை தர்ஷிகா வரைந்து காட்டியுள்ளார்.

இதன் அடிப்பையில் சந்தீப் புதோலியாவை கைது செய்த  போலீஸார் , அவரது தாய் வினிதா, சகோதரர் கிருஷ்ண குமார் புதோலியா, உறவினர் மனிஷா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here