என்னுடைய காதலை ஏற்க மறுப்பது ஏன்? பெண் காவலாளியை அடித்த நபர்; போலீஸ் விசாரணை

கடந்த பிப்வரி 25ஆம் தேதி பண்டார் புத்ரி பூச்சோங், பூச்சோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பாதுகாவலர் சாவடியில் பணியில் இருந்த பெண் காவலாளியை அங்கு வந்த ஒரு நபர் அடித்து மிரட்டி இருக்கிறார். நேற்று இந்தச் சம்பவம் பற்றிய 4 நிமிடம் 29 விநாடிகள் கொண்ட ஒரு வீடியோபதிவு முகநூலில் வைரலாகி இருக்கிறது என்று செர்டாங் போலீஸ் தலைவர் ஏசிபி ஏ ஏ அன்பழகன் கூறினார்.

நேற்று  பிற்பகல் 1.30 மணி அளவில் பாதிக்கப்பட்ட 32 வயதுப் பெண்ணிடம் இருந்து செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைமையகத்திற்கு ஒரு புகார் கிடைத்தது என்று அவர் சொன்னார். நள்ளிரவுவாக்கில் அந்தப் பெண் வேலை செய்து கொண்டிருந்த சமயம் அவருக்கு அறிமுகமான ஒரு நபர் அங்கு வந்திருக்கிறார். நான் உன்னைக் காதலிக்கிறேன். என் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் அந்த நபர் கூறியிருக்கிறார்.

அதற்குப் பதிலளித்த அந்தப் பெண், நான் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் முயற்சியில் இருக்கிறேன். ஆகவே உங்கள் காதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். என் காதலை எப்படி நீ நிராகரிக்கலாம் என்று ஆத்திரத்துடன் அந்தப் பெண்ணிடம் சண்டை போட்ட அந்த நபர் அப்பெண்ணை அடிக்கவும் செய்திருக்கிறார். பின்னர் மடக்கும் கத்தியைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் கழுத்தில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். எனினும் அந்த நபர் மீண்டும் கத்தியால் குத்த முயன்றபோது அப்பெண் அதனைத் தடுத்தார். பின்னர் அங்கிருந்து சென்று விட்ட அந்த நபர் மீண்டும் அதே இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணின் தலையில் குத்தி இருக்கிறார். கழுத்தைப் பிடித்து நெரித்திருக்கிறார்.

அங்கு ஓடி வந்த இன்னொரு காவலலூரி தலையிட்டு அவர்களிடையே சமரசம் செய்து வைத்தார். அந்த நபர் இதோடு விட்டு விடவில்லை. என் காதலை நிராகரித்த உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டி இருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் புலன் விசாரணை நடத்துகின்றனர் என்று ஏசிபி அன்பழகன் கூறினார்.

ஆயுதத்தைப் பயன்படுத்தி காயம் விளைவித்தது. கிரிமினல் அச்சுறுத்தல் விடுத்தது. பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு சென்றது ஆகிய வழக்குகள் தொடர்பில் அந்த நபரைப் போலீஸ் தேடுகிறது. ஆகவே பொதுமக்கள் புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஆரூடங்களை அல்லது கருத்துகளை வெளியிட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here