புதுடெல்லி,வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதாகக் கூறி, வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த சட்டத் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சட்ட வடிவம் பெற்று விட்டது.
இதற்கிடையே, வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, “ஜனநாயகத்திற்கு விரோதமான வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்பு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்” என்று விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.










