விமானம் தாமதம்: மெஸ்ஸி – மோடி சந்திப்பு திடீர் ரத்து..

டெல்லி: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின் கடைசி நாளான இன்று (திங்கட்கிழமை), தலைநகர் டெல்லியில் மோடியுடனான சந்திப்பு உட்பட பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், மோசமான வானிலை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணம் காரணமாகத் திட்டங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, மெஸ்ஸி – மோடி சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மும்பையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று காலை டெல்லி வரவிருந்த மெஸ்ஸியின் தனி விமானம், டெல்லியில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாகத் தாமதமாகியுள்ளது. அவர் மும்பை விமான நிலையத்திலேயே காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியைச் சந்திப்பாரா? மெஸ்ஸியின் டெல்லி பயணத்தின் முக்கிய நிகழ்வாக, அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தச் சந்திப்பு நடைபெறாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏனெனில், ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) காலை டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
பிரதமர் ஊரில் இல்லாததால், மெஸ்ஸியுடனான சந்திப்பு சாத்தியமில்லை. பிரதமரைச் சந்திக்க முடியாவிட்டாலும், மெஸ்ஸிக்கு டெல்லியில் வேறு முக்கிய சந்திப்புகள் காத்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை மெஸ்ஸி சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் அவர் சந்திக்கவுள்ளார்.
ரோஹித் சர்மாவுடன் சந்திப்பு! விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை மெஸ்ஸி சந்திக்கவுள்ளார். டெல்லியில் உள்ள புராண கிலாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தச் சந்திப்பு நிகழவுள்ளது. இவர்களுடன் பாராலிம்பிக் தங்கம் வென்ற சுமித் அன்டில், குத்துச்சண்டை சாம்பியன் நிகத் சரின் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நிஷாத் குமார் ஆகியோரையும் மெஸ்ஸி சந்திக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here