எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் – 7 இந்தியர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்,காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 06-07 அன்று இரவு காஷ்மீரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 7 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here