கோலாலம்பூர்:
மலேசிய அரசாங்கம் இவ்வாண்டு இரண்டாம் பாதியில் (Q2) மானியவிலை பெட்ரோல் விலைச் சலுகையில் மாற்றம் செய்ய இருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்து உள்ளது.
பொருளாதார சவால்களுக்கு இடையே பெட்ரோல் விலைச் சலுகையை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் அது குறிப்பிட்டு உள்ளது.
மலேசிய அரசாங்கம் பெட்ரோலுக்கு அளித்து வரும் உதவி மானியம் தொடர்பாக Bloomberg News செய்தித்தளம் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி அமைச்சின் பேச்சாளர் பதில் அளித்தார்.
“RON95 பெட்ரோலுக்கான மானிய பகிர்பு மீதும் அது தொடர்பான திட்டங்களைப் பரிசீலிப்பது தொடர்பிலான கருத்துகள் மீதும் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும். அது குறித்து ஏராளமான அமைப்பினருடன் அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது,” என்றார் அவர்.
RON95 பெட்ரோலுக்கு இரு வகையான விலையை இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.
அதன்படி, நாட்டு மக்களில் வசதி படைத்த 15 விழுக்காட்டினர் சந்தை விலையிலேயே பெட்ரோலை வாங்குவர். அதேநேரம், இதர மலேசியர்கள் அனைவரும் சலுகை விலையில் தொடர்ந்து பெட்ரோலை வாங்கலாம்.
வசதி படைத்தவர்களுக்கு சலுகையை நிறுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 8 பில்லியன் ரிங்கிட் மிச்சமாகும்.